இஸ்லாமபாத்: சவூதி அரேபியா மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மக்கா ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ராணுவ ரீதியான பதிலடி கொடுப்பது குறித்து எவ்வித விவாதங்களும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்று அது கூறியது.
துருக்கியும் சவூதி அரேபியாவும் இணைந்து கையெழுத்திட்ட கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை இஸ்லாமாபாத் எவ்வாறு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது என்பது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் விளக்கினார்ர்.
“தற்போது அது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை.நேரம் வரும்போது ஒப்பந்தத்தின்கீழ் நாங்கள் செயல்படுவோம்,” என்று அவர் கூறினார்.
இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின்மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், அவை அனைத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் என்று கடந்த மாதம் கையெழுத்தான இந்தக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த வாரம் சவூதி நகரங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கியதை அடுத்து இந்தக் கேள்வி எழுந்தது.
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தியதை அடுத்து, அவர்களைக் கட்டுப்படுத்துமாறு ஈரானைப் பாகிஸ்தான் எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

