இஸ்லாமாபாத்: கடந்த சில நாள்களாக நடைபெற்ற தீவிர அரசதந்திர நடவடிக்கைகளில், பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு செயல்பட்டதன் மூலம், இந்த வாரம் அந்நாட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க - ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர், ஏப்ரல் 15ஆம் தேதி ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் பரிந்துரைகளை அவர் தங்களிடம் முன்வைத்ததாக ஈரானியத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், பாகிஸ்தானியப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நட்பு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
“தற்போது நடைபெற்று வரும் இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பலன் அளித்து வருகின்றன. மேலும், இந்த உத்வேகத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல இந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்து தேவைப்படும்,” என்று இஸ்லாமாபாத்தைத் தளமாகக் கொண்ட தேசியக் கலந்துரையாடல் கருத்தரங்கின் நிர்வாக இயக்குநர் திரு ஷெஹர்யார் கான் கூறினார்.
ஏப்ரல் 11ஆம் தேதியன்று இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையின்போது அறையில் இருந்த இரண்டு பாகிஸ்தான் மத்தியஸ்தர்களில் ஃபீல்ட் மார்ஷல் முனீரும் ஒருவர்.
“இதுபோன்ற சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது அரசியல் தலைமை அல்ல, மாறாக ராணுவத் தலைமைதான்,” என்று பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருவதில் ஃபீல்ட் மார்ஷல் முனீரின் ஈரான் பயணம் முக்கியமானது என்று அந்த அதிகாரி விவரித்தார்.

