இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கான தனது மூன்று நாள் பயணத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 18) நிறைவு செய்தார்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக் குழுவினரையும் சந்தித்துப் பேசினார்.
வரும் நாட்களில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இப்பயணம் அமைந்துள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவும், வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தவும் பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் காட்டுவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும், சவூதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொண்டு அரசதந்திர முயற்சிகளைத் தொடர்ந்தார். வரும் வாரத்தில் இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஹ்ரானில் நடந்த சந்திப்பின்போது, நீடித்த அரசதந்திர ஈடுபாடுகள் மூலம் சிக்கல்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அசிம் முனீர் வலியுறுத்தினார்.

