இலங்கை கிரிக்கெட் அணிக்குப் பாகிஸ்தானின் ராணுவப் பாதுகாப்பு

2 mins read
93f2e2a5-b39d-431c-b40a-f11c68637247
நவம்பர் 13ஆம் தேதி, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான போட்டிக்கு முன்னதான பயிற்சியின்போது இலங்கை அணியுடன் பவன் ரத்நாயக்க. - படம்: ராய்ட்டர்ஸ்

கராச்சி: இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு கொடிய தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவம், பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை இலங்கை கிரிக்கெட் அணியைப் பாதுகாக்க நிறுத்தியுள்ளது என்று உள்துறை அமைச்சர் வியாழக்கிழமை (நவம்பர் 13) அன்று தெரிவித்தார்.

இலங்கை தற்காப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், இலங்கை அணியின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நாடாளுமன்றத்தில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தங்குவது குறித்து இலங்கை வீரர்கள் கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அவை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் திரு நக்வி கூறினார்.

“இலங்கை அதிபர் நேற்று (கிரிக்கெட்) அணியினருடன் நேரில் பேசி அவர்களை விளையாட ஊக்குவித்தார்,” என்று திரு நக்வி மேலும் கூறினார்.

கிரிக்கெட் மைதானம் மற்றும் இலங்கை அணி தங்கியுள்ள ஹோட்டல் இரண்டும் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ.க்கும் குறைவான தூரத்தில் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் தலைநகரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலான குண்டுவெடிப்புக்குப் பிறகு, பல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நவம்பர் 12 அன்று தெரிவித்தது.

பாகிஸ்தான் அதிகாரிகள் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியதாகக் கூறி, குழுவைத் தங்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.

நவம்பர் 11 அன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர், 27 பேர் காயமடைந்தனர். இது தலைநகரில் பல ஆண்டுகளளுக்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

வானாவில் உள்ள ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மாணவர்களை மீட்டு தாக்குதல் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றனர்.

இந்த வன்முறை, 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூர்ந்தது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் அனைத்துலக கிரிக்கெட் போட்டிகள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக நிறுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு சிற்றரசுகளில் தங்கள் ஆட்டங்களை விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்