இம்ரான் கான் கட்சி ஆளும் மாநிலத்தில் அவசரநிலை அறிவிப்பு

இம்ரான் கான் கட்சி ஆளும் மாநிலத்தில் அவசரநிலை அறிவிப்பு

கைபர் பக்துன்குவா மாநில அரசை இடைநீக்கம் செய்தார் அதிபர்
படம்: ராய்ட்டர்ஸ்

11 Oct 2026 - 6:12 pm

2 mins read

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அவசரநிலையை அறிவித்த பாகிஸ்தான் அதிபர், அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இடைநீக்கம் செய்து அதன் அதிகாரங்களைப் பறித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு கைபர் பக்துன்குவா மாநிலத்தை ஆட்சி செய்துவரும் இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (பிடிஐ) கட்சிக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் அரசாங்கத்திற்கும் இடையே கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில், அதிபர் அந்த முடிவை எடுத்துள்ளார்.

இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி அவரது கட்சியினர் கடந்த சில நாள்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வரும் நாள்களில் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லப் போவதாகவும் அவர்கள் மிரட்டி வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அவசரநிலையை அறிவிக்குமாறு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வழங்கிய பரிந்துரையில் அதிபர் ஆசிஃப் அலி ஸர்தாரி கையெழுத்திட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு இஸ்லாமியப் போராளித்துவத்திற்கு எதிராகப் போராடத் தவறிவிட்டதாகப் பிரதமர் ஷெரீஃப்பின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அவசரநிலையின்போது மாநில அரசின் சில அல்லது அனைத்து அரசாங்கச் செயல்பாடுகளையும் மத்திய அரசே பொறுப்பேற்று நடத்த அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

இருப்பினும், அந்த மாநிலம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது குறித்து அதிபர் அலுவலகம் தெளிவான விவரங்களைக் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும் பிடிஐ கட்சியின் பேச்சாளருமான ஸுல்ஃபிகார் புஹாரி, அந்த முடிவை ஒரு ‘கேலிக்கூத்தான முடிவு’ என்று வர்ணித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்