பாரிஸ்: பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அதிகாரபூர்வமாய் அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் அந்த அங்கீகாரம் நடப்புக்கு வரும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் தெரிவித்தார். G7 தொழில்வள நாடுகளில் அவ்வாறு செய்யவிருக்கும் முதல் நாடு பிரான்ஸ்.
நியூயார்க்கில் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தின்போது அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று திரு மெக்ரோன் ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டார்.
“காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதே இன்றைய உடனடித் தேவை. அமைதிக்கு சாத்தியம் இருக்கிறது. அனைத்துப் பிணையாளிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காஸா மக்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிப்பொருள்கள் சென்றுசேர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
திரு மெக்ரோனின் முடிவைப் பாலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றனர். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, அந்நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகச் சாடினார்.
திரு மெக்ரோனின் அறிவிப்புக்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ பிரான்சின் முடிவைப் பொறுப்பற்ற செயல் என்று கூறினார்.
G7 குழுவில் பிரான்சுடன் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவையும் அங்கம் வகிக்கின்றன.
மத்திய கிழக்கில் நியாயமான, நீண்டகாலத்துக்கு நீடிக்கும் அமைதியை உறுதிப்படுத்தப் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் முடிவைப் பிரான்ஸ் எடுக்கும் என்றார் திரு மக்ரோன். ஹமாஸ் அதன் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் காஸாவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
திரு அபாசுக்கும் பிரெஞ்சு அதிபர் அவரின் முடிவு குறித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய கிழக்கில் கடும் போர் மூண்டது. அது இன்று வரை தொடர்கிறது.
இந்நிலையில் பிரான்சின் முடிவு வந்துள்ளது.
அது சரியான பாதையில் செல்வதற்குரிய ஆக்ககரமான நடவடிக்கை என்று ஹமாஸ் தெரிவித்தது. மற்ற நாடுகளும் பிரான்சைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஹமாஸ் கேட்டுக்கொண்டது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்டவை பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கின்றன.
ஆனால் இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.