கோலாலம்பூர்: இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் பாலஸ்தீனத்துக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைத்துலக நாடுகளில் மலேசியாவும் ஒன்று என மலேசியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் ஜீஹாட் ஃபூஆட் அல்கட்ரா பாராட்டியுள்ளார்.
அரசாங்க அளவிலும் பொதுமக்கள் அளவிலும் பாலஸ்தீனத்துக்கு அசைக்கமுடியாத ஆதரவை மலேசியா வழங்கிவருவதைத் திரு அல்கட்ரா மெச்சினார்.
ஒற்றுமை, இருதரப்பு மரியாதை, பொதுவான மனிதநேயப் பண்புகள் ஆகியவற்றில் இருதரப்பு உறவு வேரூன்றியுள்ளதை மறுவுறுதிப்படுத்திய திரு அல்கட்ரா, பொருளியல், வர்த்தகம் ஆகியவற்றில் மலேசியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த பாலஸ்தீனம் விரும்புவதாகக் கூறினார்.
“தெளிவான ஆணையுடன் எமது அதிபர் மாமுட் அபாஸ், பிரதமர் முகமது முஸ்தஃபா ஆகியோரிடமிருந்து வருகிறேன். மலேசியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அவர்கள் எனக்கு உத்தரவிட்டுள்ளனர்,” என்றார் திரு அல்கட்ரா.
பாலஸ்தீனத்தின் விருப்பத்தை மலேசிய அரசாங்கத்திடமும் மக்களிடமும் கொண்டுசேர்ப்பதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற திரு அல்கட்ரா, அந்தப் பொறுப்பைச் செய்யும் தாம் ஓர் அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தின் நிலவரத்தைத் தொடக்கத்திலிருந்தே அறிந்துள்ள மலேசியா, எல்லா நேரங்களிலும் அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்றார் திரு அல்கட்ரா.
அனைத்துலக மேடையில் உள்ள தமது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்துக்கான ஆதரவை மலேசியா வலுப்படுத்தும்படி திரு அல்கட்ரா கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் கூடிய விரைவில் மலேசியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது குறித்தும் திரு அல்கட்ரா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“மலேசியா எப்போதும் எங்களுக்கு நெருக்கமாக உள்ள நாடு. மலேசியாவுடன் உள்ள உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்,” என்றார் அவர்.
காஸாவில் மேற்கொள்ளப்படும் போருக்குப் பிந்திய மறுசீரமைப்புப் பணிகளில் மலேசியாவும் ஈடுபடும்படி திரு அல்கட்ரா கோரினார். மறுசீரமைப்புப் பணிகளில் மலேசியா இன்னும் கூடுதல் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

