ரமாலா: தலைமைத்துவ மாற்றுத்துக்கு பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ் அடித்தளம் அமைத்துள்ளார்.
எதிர்காலத்தில் தாம் பதவி விலகும்போது, பாலஸ்தீன தேசிய மன்றத்தின் தலைவர் திரு ராவ்ஹி ஃபாட்டு இடைக்கால அதிபராகப் பதவி வகிப்பார் என்று அதிபர் அப்பாஸ் நவம்பர் 27ஆம் தேதியன்று அறிவித்தார்.
89 வயது திரு அப்பாசின் பதவிக்காலம் 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்தபோதிலும் அவர் தொடர்ந்து அதிபராக இருந்து வருகிறார்.
துணை அதிபர் அல்லது அவருக்குப் பிறகு அதிபர் பதவி வகிப்பவரை நியமிக்க திரு அப்பாசுக்குத் தொடர்ந்து நெருக்குதல் அளிக்கப்பட்டது.
தற்போதைய பாலஸ்தீன சட்டத்தின்படி, புதிய அதிபர் நியமிக்கப்படாத நிலையில், பாலஸ்தீன சட்டமன்ற நாயகர் அப்பதவியை ஏற்பார்.
பாலஸ்தீன சட்டமன்றத்தில் ஹமாஸ் அமைப்பு பெரும்பான்மை வகித்தது.
ஆனால் சட்டமன்றத்தை திரு அப்பாஸ் 2018ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகக் கலைத்தார்.
அவரது ஃபட்டா கட்சிக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கருத்து மோதல்கள் நிலவுகின்றன.