ரமல்லா, மேற்குக் கரை: பாலஸ்தீன அதிகாரிகள் சனிக்கிழமை தங்கள் நாட்டிற்கான முதல் சவூதி அரேபியத் தூதரை வரவேற்றனர். சவூதி அரேபியா இஸ்ரேலுடன் அதிகாரபூர்வமாக அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது குறித்து பரிசீலித்தாலும்கூட சவூதி அரேபியாவுக்கு ஆதரவு தரும் விதமான நடவடிக்கை இது என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
ஜோர்தானில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸின் அரசதந்திர ஆலோசகர் மஜ்டி அல்-கலிடி, சவூதி அரேபியத் தூதர் நயெஃப் அல்-சுதைரி பாலஸ்தீனத் தூதராக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார். அவர் பாலஸ்தீனத்தில் தங்கியிருக்காமல் தாயகத்தில் இருந்தே பணியாற்றுவார்.
பாலஸ்தீனத்திற்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக தூதர் நியமிக்கப்பட்டிருப்பதாக திரு அல்-கலிடி கூறினார்.

