தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டை நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஹமாசை வற்புறுத்தும் பாலஸ்தீனர்கள்

2 mins read
c4b5ecb2-5c65-4366-a8e8-b20bbe8b62f5
மத்திய காஸாவில் செப்டம்பர் 25 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமுற்ற கட்டடத்தைப் பாலஸ்தீனர்கள் சிலர் பார்வையிடுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

டெல் அவிவி: காஸாவில் சண்டையை நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள அண்மைத் திட்டத்தை ஹமாஸ் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் பலர் கூறுகின்றனர்.

காஸா வட்டாரத்தில் ஈராண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. அதில் பல சமூகங்கள் அழிந்துவிட்டன. பாலஸ்தீனர்கள் தங்களுடன் அக்கம்பக்கத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பறிகொடுத்தனர். அதனால் விரைவில் போரை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அமெரிக்காவின் சண்டை நிறுத்தத் திட்டம் கைகூடும் என்ற நம்பிக்கையுடன் பலர் இருக்கின்றனர். ஆனால் ஹமாஸ் இன்னும் அதனை ஏற்கவில்லை.

“சண்டையை நிறுத்த முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு ஹமாஸ் இணங்கவேண்டும். நாங்கள் ஏற்கெனவே நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,” என்று காஸா நகரில் வசிக்கும் கட்டுமான ஊழியரான 43 வயது திரு மஹ்மூட் போல்போல் கூறினார். போரின்போது ஆறு பிள்ளைகளுடன் பல சேதங்களைச் சந்தித்து தமது வீட்டிற்குள்ளேயே இருந்ததாக அவர் சொன்னார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செப்டம்பர் 29ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவைச் சந்தித்தபோது திட்டத்தை முன்வைத்தார். திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஹமாசை ஒழித்துக்கட்டும் பணியை முடித்துவிடுமாறு இஸ்ரேலிடம் சொல்லப்போவதாகத் திரு டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.

ஹமாஸ் இதுவரை அதற்குப் பதில் கூறவில்லை. புதன்கிழமை (அக்டோபர் 1) அன்று காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களில் சண்டை நிறுத்தத் திட்டத்திற்குப் பொதுமக்களிடையே பரவலான ஆதரவு இருப்பது தெரியவந்தது.

கடந்த இரண்டு நாள்களாக அண்டை வீட்டார் தம்முடன் சண்டை நிறுத்தத் திட்டம் பற்றி மட்டுமே பேசியதாகத் திரு போல்போல் குறிப்பிட்டார். ஹமாஸ் அதனை ஏற்கவில்லை என்றால் தமது குடும்பம் காஸா நகரிலிருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும் என்றார் அவர்.

தாங்கள் பட்டதெல்லாம் போதும் என்பதை ஹமாஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு போல்போல் சொன்னார். காஸாவில் இருக்கும் பாலஸ்தீனர்களில் பெரும்பாலோர் ஹமாஸ் குழுவின் உறுப்பினர்கள் அல்லர் என்று கூறிய அவர், தங்களை ஏன் தற்போதைய பிரச்சினைக்குள் இழுத்துவிட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

ஹமாஸ் அதன் வசமுள்ள எஞ்சிய பிணையாளிகள் அனைவரையும் சண்டை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட 72 மணிநேரத்திற்குள் விடுவிக்கவேண்டும் என்று அண்மைத் திட்டம் கோருகிறது. ஹமாசின் பிடியில் இன்னும் ஏறக்குறைய 20 பேர் உயிருடன் இருப்பதாகவும் கிட்டத்தட்ட 25 சடலங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

பதிலுக்கு, இஸ்ரேல் அதன் சிறைகளில் வாழ்நாள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 250 பாலஸ்தீனர்களை விடுவிக்கும். அவர்களோடு போரின்போது தடுத்துவைக்கப்பட்ட மேலும் 1,700 பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்படுவர். எத்தனை இஸ்ரேலியப் பிணையாளிகளின் சடலங்கள் திருப்பிக்கொடுக்கப்படுகின்றனவோ அதே எண்ணிக்கையில் பாலஸ்தீனக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேல் ஒப்படைக்கும் என்றும் திட்டம் குறிப்பிடுகிறது..

குறிப்புச் சொற்கள்