மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க பன்னீர்செல்வத்தின் மனு நிராகரிப்பட்டது

2 mins read
d05737cb-b687-437b-84a5-629742692ba2
அரசாங்கம் தொடுக்கும் வழக்கிற்கும் அரசாங்கம் அல்லாது மற்றவர்களால் தொடுக்கப்படும் வழக்கிற்கும் உள்துறை அமைச்சின் கொள்கைகள் கொண்டுள்ள வேறுபாடு சட்டவிரோதமானதா என்பதைக் கண்டறிய அலசி ஆராயப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்தது. - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: தமக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கக் கோரி மரண தண்டனைக் கைதியான பன்னீர்செல்வம் பரந்தாமன், சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால் மலேசியரான பன்னீர்செல்வத்தின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தமது முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தில் பன்னீர்செல்வம் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பான விசாரணையின் முடிவுகள் வெளிவரும் வரை மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருந்தார்.

பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்ததை அடுத்து, அது குறித்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

ஆனால், மரண தண்டனைக் கைதிகள் செய்துள்ள புகார்கள் தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது, மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதிகள் தொடர்பான திட்டமிடுதல் குறித்து உள்துறை அமைச்சின் கொள்கையைப் பொறுத்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

இது அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சின் கொள்கை வலியுறுத்துவதை நீதிமன்றம் சுட்டியது.

உள்துறை அமைச்சு அதன் கொள்கைகளை சட்டவிரோதமான முறையில் மாற்றியதா என்பதைக் கண்டறிய நீதிமன்றம் விசாரணை நடத்தியதாக தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தது.

அரசாங்கம் தொடுக்கும் வழக்கிற்கும் அரசாங்கம் அல்லாது மற்றவர்களால் தொடுக்கப்படும் வழக்கிற்கும் உள்துறை அமைச்சின் கொள்கைகள் கொண்டுள்ள வேறுபாடு சட்டவிரோதமானதா என்பதைக் கண்டறிய அலசி ஆராயப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்தது.

“உள்துறை அமைச்சு அதன் கொள்கைகளைச் சட்டவிரோதமாக மாற்றியுள்ளது என்று குற்றவாளி நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அவ்வாறு செய்யத் தவறிவிட்டார்,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

உள்துறை அமைச்சு அப்படியே அதன் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதிகள் தொடர்பான கொள்கைகளை மாற்றியிருந்தாலும் அது எவ்வாறு சட்டவிரோதமாகும் என எடுத்துக்கூற பன்னீர்செல்வம் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்குள் குறைந்தது 51.84 கிராம் டியாமோர்ஃபின் எனும் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்துக்காகப் பன்னீர்செல்வத்துக்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தமக்குக் கருணை காட்டுமாறு அதிபரிடம் கோரிக்கை விடுத்து பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்