லண்டன்: திருவாட்டி கிளேர் லோமாஸ் எனும் 43 வயதுப் பெண் 2007ல் குதிரைச் சவாரியின்போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
நெஞ்சுக்குக்கீழ் இவரது உடல் செயல்திறனை இழந்தது. இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்றில் சென்ற சனிக்கிழமை இவர் பயணம் செய்ததுடன் நன்கொடையும் திரட்டினார்.
வடஅயர்லாந்தில் இவர் அச்சாதனையை நிகழ்த்தினார்.
24.4 கிலோமீட்டர் நீளமுள்ள பந்தயப் பாதையில் திருவாட்டி லோமாஸ் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகம்வரை வாகனத்தைச் செலுத்தினார்.
அத்துடன், தண்டுவடக் காயங்களுக்கு உதவும் அறநிறுவனத்திற்கு இவர் ஏறக்குறைய $7,365 நன்கொடை திரட்டினார்.
இதற்கு முன்னர் திருவாட்டி லோமாஸ், மோட்டார்சைக்கிள் ஓட்டியதில்லை. 'சூப்பர் பைக்' ஓட்டிய அனுபவம் தமக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது என்றும் முன்னர் விபத்து நிகழ்ந்தபோது இவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்கவில்லை என்றும் அவர் கூறியதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறியது.
2012, 13ஆம் ஆண்டுகளில் பெருநடை, கையால் செலுத்தும் மிதிவண்டி என சாகசச் செயல்களிலும் இவர் ஈடுபட்டதுண்டு.

