மியன்மாரில் 6,000 சிறைக்கைதிகளுக்கு மன்னிப்பு, விடுதலை

1 mins read
de345038-347b-4d36-a738-2a9c4f0060f1
மியன்மாரின் சுதந்திர தினத்தன்று யாங்கூனின் இன்செய்ன் சிறைக்கு வெளியே சிறைவாசிகளின் குடும்பத்தினர் காத்து நிற்கின்றனர்  - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 6,000க்கும் அதிகமான குற்றவாளிகளை விடுதலை செய்வதாக அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6,134 ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மியன்மாரின் தேசிய தற்காப்பு, பாதுகாப்பு மன்றம், தனது அறிக்கையில் குறிப்பிட்டது. 

52 வெளிநாட்டுக் கைதிகளும் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ராணுவம் மற்றோர் அறிக்கையில் குறிப்பிட்டது.

பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக இது ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2021 பிப்ரவரியில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு அடுத்து ராணுவம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்துள்ளது. 

யங்கூனின் இன்செய்ன் சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர். சிறைவாசிகளின் பெயர்களைத் தாங்கிய தாள்களை அவர்களது குடும்பத்தினர் கையில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டங்கட்டமாக ஒரு மாதம் நீடிக்கும் தேர்தலில் மியன்மாரின் ராணுவ ஆட்சியினர் நடத்தும் தேர்தல், கடந்த வாரம் தொடங்கியது. இதனால் அந்நாட்டில் ஜனநாயகம் மலரும் என ராணுவத் தலைவர்கள் கூறிவந்தாலும் அதனைக் கண்துடைப்பு என மனித உரிமை ஆர்வலர்கள் சாடி வருகின்றனர்.

முதற்கட்ட வாக்கெடுப்பில் ராணுவத்தை ஆதரிக்கும் ‘யூஎஸ்டிபி’ எனப்படும் ஒன்றிய ஒருமைப்பாடு, மேம்பாட்டுக் கட்சி, இதுவரை நாடாளுமன்றத்தில் 90 இடங்களைப் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்