அன்வார் பிரதமர் ஆவதற்கான தகுதியை பொதுமன்னிப்பு மீட்டுள்ளது என விளக்கம்

1 mins read
6eda1284-acb6-4bc2-a2e1-78b6224c1e5f
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அன்வார் இப்ராகிம் விலக வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (ஏஜிசி) நிராகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டு அப்போதைய மாமன்னரால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, தேர்தலில் போட்டியிடுவதற்கான அன்வாரின் தகுதியை மீட்டுள்ளதாக அந்த அலுவலகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

“அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, எந்தக் குற்றமும் செய்யாதவர் என்ற சட்டபூர்வ அந்தஸ்தை உறுதிசெய்வதாகும் என்றும் அது தெரிவித்துள்ளது. எனவே, கூட்டரசு  அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48(1)இ)ன்கீழ் தகுதிநீக்கம் செய்ய எந்தவோர் அடிப்படையும் இல்லை என்பதே அதன் பொருள்,” என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் விளக்கி உள்ளது.

முன்னதாக, 2022 நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வார் இப்ராகிம் தேர்ந்து எடுக்கப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி வழக்கு தொடுத்திருந்தார்.

அரசியலமைப்புச் சட்டப்படி, சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற தடையிலிருந்து அன்வாருக்கு வெளிப்படையாக விலக்கு அளிக்கப்படுவதாக பொதுமன்னிப்பு தெரிவிக்கவில்லை என்று திரு வேதமூர்த்தி தெரிவித்து இருந்தார்.

தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படாததால் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அன்வார் தடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டு இருந்தார்.

குறிப்புச் சொற்கள்