கோலாலம்பூர்: ஜோகூரில் பொருளியல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் விதமாக சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக பல சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய அரசாங்கம் செப்டம்பர் 20ஆம் தேதி ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள சிறப்புப் பொருளியல் மண்டலத்தைத் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதாக ஜோகூர் முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனிதவள குழுவின் தலைவர் லீ டிங் ஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நிதியுதவி மற்றும் சலுகைகள் காப்புறுதி நிதி நிறுவனங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும் என்று திரு லீ கூறினார்.
ஜோகூர் பாருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்தத் தகவலை அவர் வெளியிட்டதாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் திறப்பு விழாவில் இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசானும் கலந்துகொள்ளக்கூடும் என்று திரு லீ கூறினார்.
கடந்த ஜூலை மாதம், ஜோகூர் 1.2 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதியை செய்தது. அதில் பெரும்பாலானவை பெட்ரோ கெமிக்கல்கள், ரசாயனங்கள், மின்சாரம், மின்னணுவியல், மற்றும் உலோகம் அல்லாத பொருட்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்து முதன்முதலாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அறிவித்தார்.

