மலேசிய ஆளும் கூட்டணியில் ஊழல் குற்றச்சாட்டால் விரிசல்

மலேசிய ஆளும் கூட்டணியில் ஊழல் குற்றச்சாட்டால் விரிசல்

அரசியல் நிலையற்றத் தன்மை ஏற்படுவதைத் தவிர்க்க, அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை: ஜனநாயகச் செயல் கட்சி
படம்: ராய்ட்டர்ஸ்

06 Mar 2026 - 3:39 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஜனநாயகச் செயல் கட்சி (DAP) அடுத்த தேர்தலில் அவரை ஆதரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்துவருவதாக அதன் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கிமீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சீர்திருத்தங்களை முன்வைத்து அமைக்கப்பட்ட கூட்டணியின் நிலை சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பல பில்லியன் ரிங்கிட் உள்ளடங்கிய 1எம்டிபி நிதி மோசடி நாட்டையே உலுக்கி முன்னாள் பிரதமர் சிறையில் உள்ள நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப தற்போதைய மலேசிய அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துவருகிறது.

அதைவிட அளவில் சிறியதென்றாலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர்மீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலைத் தடுப்பேன் என்று சூளுரைத்த பிரதமர் அன்வார் அதன் விசாரணைக்கு முழு ஆதரவு வழங்காத நிலை ஆளும் கூட்டணியின் ஆகப் பெரிய கட்சிக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சிறந்த உத்தியுடன் முன்னேற, தேர்தலுக்கான நேரம் வரும்போது, கட்சி தனது நிலைப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பரிசீலிப்பதை எதிர்பார்க்கிறேன்,” என்று ஜனநாயக செயல் கட்சியின் ஒழுங்குமுறைக்கான தலைவர் டோனி புவா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதைத் தவிர்க்க, அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை தற்போது திரும்பப் பெறப்போவதில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

தமது அரசாங்கம் ஊழலை ஒழிக்க கடுமையாக உழைக்கிறது என்று கூறியுள்ள பிரதமர், அமைப்பு ரீதியாக ஆழமாகப் பதிந்துள்ள ஊழலைக் களைவதில் சவால்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்அன்வார் இப்ராகிம்ஊழல்