தேசிய முன்னணிக்கு உதவத் தயார்: பாஸ்

தேசிய முன்னணிக்கு உதவத் தயார்: பாஸ்

2 mins read
9d047dbe-ec84-4ced-82e5-8750d4ce7dcc
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜூலை 11) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது. இதுவே அம்மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல்.

இந்நிலையில், ஜோகூரில் மாநில அரசை அமைக்க அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில், அதனுடன் சேர்ந்து மாநில அரசாங்கம் அமைக்க தயாராக இருப்பதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இக்கருத்தை பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் புதன்கிழமையன்று (ஜூலை 8) ஜோகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் உள்ள பக்ரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைத்துள்ளார்.

மலாய்-முஸ்லிம் அரசியல் தலைமையை பேணிக் காக்கும் நோக்கில் மாநில நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கி, அதை வலுப்படுத்த தயாராக இருப்பதாக திரு அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

“ஜோகூரில் பாஸ் கட்சி வேட்பாளர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தின் முதல்வராக அம்னோவைச் சேர்ந்தவர் பதவி வகிக்கலாம். ஜோகூர் மாநில செயற்குழுவில் இடம்பெறும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை அம்னோவிடம் விட்டுவிடுவோம். மாநில அரசை அமைக்க தேசிய முன்னணிக்குப் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அதனுடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க பாஸ் தயாராக உள்ளது. ஆனால், பாஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து முடிவெடுக்கப்படும்.

“மலாய்-முஸ்லிம் சமூகத்திடம் ஆட்சி அதிகாரம் இருக்கும் நிலை தொடர்வதே முக்கியம். தீவிரவாதப் போக்கு இல்லாத முஸ்லிம் கட்சிகளை ஏற்றுக்கொள்கிறோம். ஒருவேளை மாநில அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணிக்குப் போதுமான இடங்கள் கிடைத்தால் அது பாஸ் கட்சிக்கு எவ்வித அதிருப்தியையும் ஏற்படுத்தாது,” என்று திரு அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்