கோலாலம்பூர்: மலேசியாவின் எதிர்க்கட்சியான ‘பாஸ்’, பெர்சத்து கட்சியுடனான அரசியல் கூட்டணியை அதிகாரபூர்வமாக முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை (ஜூன் 8 ) மாலை நடைபெற்ற பாஸ் கட்சியின் மத்தியச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இந்த அதிரடி முடிவை அறிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழல், ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் பெர்சத்து கட்சியுடனான அனைத்து அரசியல் ஒத்துழைப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியச் சகோதரத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, கொள்கை மற்றும் சட்ட அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்குக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் திரு அப்துல் ஹாடி கூறினார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் முக்கியத் தூண்களாக விளங்கிய பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையே கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் தலைதூக்கத் தொடங்கின.
எனினும், கூட்டணியைத் தக்கவைக்க விரும்புவதாகப் பெர்சத்து கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில், மாநிலத் தேர்தல்கள் மற்றும் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இஸ்லாமியச் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு புதியதொரு தேர்தல் உடன்பாட்டைப் பாஸ் கட்சி இனி ஆராயும் என்று திரு அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெர்சத்து கட்சியுடனான கூட்டணி உறவை முறித்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவை உணர்ச்சிவசப்பட்டோ அல்லது குறுகியகால அரசியல் லாபத்துக்கோ தமது கட்சி எடுக்கவில்லை என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமது ஃபாட்லி ஷாரி தெளிவுபடுத்தினார்.
கூட்டணி மூலம் அரசியல் இஸ்லாமியச் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதும் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதும் சாத்தியமாகுமா என்று ஆராய்ந்த பிறகே கூட்டணியிலிருந்து விலக தீர்மானித்ததாக அவர் கூறினார்.
அண்மைக் காலமாக பெர்சத்துவின் சில நடவடிக்கைகள் இஸ்லாமியச் சகோதரத்துவத்துக்கு எதிராக இருந்ததாகத் திரு அகமது ஃபாட்லி தெரிவித்தார்.

