தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் - விமான விபத்து; பலர் மாண்டதாக அச்சம்

2 mins read
6fd5a34c-0c4c-4524-96a6-e6597cad51ea
ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொட்டோமக் ஆற்றில் தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவசரகாலப் படையினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று, நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் பலர் உயிரிழந்தனர்.

அந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 64 பேர் இருந்ததாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. அவர்களில் நால்வர் விமான ஊழியர்கள்.

விபத்து புதன்கிழமை இரவு (ஜனவரி 29) நேர்ந்தது.

ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 30 உடல்களுக்கும் மேல் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலோர் மாண்டிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக கேன்சஸ் நகர செனட்டர் ராஜர் மார்‌ஷல் கூறினார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டருடன் மோதியதையடுத்து, விமானம் அருகிலிருந்த பொட்டோமக் ஆற்றில் விழுந்தது.

தங்களின் ஹெலிகாப்டர் அவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதில் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தை பிஎஸ்ஏ நிறுவனம், அமெரிக்கன் ஏர்லைன்சுக்காக இயக்கியது. 5342 என்ற எண்ணைக் கொண்ட அவ்விமானம் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா நகரிலிருந்து புறப்பட்டது. பொட்டோமக் ஆற்றில் தேடல், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீட்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் கைகோத்துள்ளதாகவும் காவல்துறை கூறியது.

அவ்விமானத்தில் 65 பயணிகள் வரை பயணம் செய்யமுடியும் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, விமானத் தரையிறக்கமும் புறப்பாடும் நிறுத்திவைக்கப்பட்டு, ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக வால் ஸ்திரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ரீகன் விமான நிலையத்தில் நேர்ந்த மோசமான விபத்து குறித்து தம்மிடம் விளக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். நிலைமையைக் கையாள உடனடியாகக் களமிறக்கப்பட்ட உதவியாளர்கள் ஆற்றிய பெரும்பங்குக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாக திரு டிரம்ப் கூறினார்.

நிலைமையைக் கண்காணிப்பதாகவும் மேல்விவரங்கள் தெரிந்தவுடன் அவை வெளியிடப்படும் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்