கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதால் விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பயணி!

கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதால் விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பயணி!

ஊடகம்

14 Feb 2024 - 4:23 pm

1 mins read

மெக்சிகோ: விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஜோவனா சியூ என்ற அப்பயணி ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) வழியாகப் பகிர்ந்துகொண்டார்.

தனக்கு வயிற்றுக்கோளாறு இருந்ததால் பலமுறை கழிவறை செல்ல வேண்டியதாயிற்று என்று சியூ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டலில் அறை பதிவுசெய்வதாகவோ அல்லது இன்னொரு விமானத்தில் பயணம் செய்ய வழிவகை செய்வதாகவோ விமான நிறுவனம் உறுதி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அவசரத்தில் தனது பணத்தையும் விமானத்திலேயே மறந்துவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்ட சியூ, ஹோட்டலுக்குச் செல்ல டாக்சிக்குக்கூட கையில் பணமில்லை என்றும் கண்ணீர் உகுத்தார்.

விமான நிலையப் பாதுகாவலர் ஒருவருடன் பேசியதைக் காணொளியாக அவர் பதிவுசெய்தார். அக்காணொளியை அழிக்காவிடில் மறுநாள் விமானத்திலும் ஏற முடியாது என்று வெஸ்ட்ஜெட் நிறுவன மேற்பார்வையாளர் ஒருவர் தம்மை மிரட்டியதாகவும் சியூ தெரிவித்தார்.

கடினமான நேரத்தில் வெஸ்ட்ஜெட்டிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததால் சியூ தமக்கு நேர்ந்த அனுபவத்தை இணையம் வழியாகப் பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து, அவரைத் தொடர்புகொண்ட வெஸ்ட்ஜெட், நிகழ்ந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டு, சியூவிற்கு உதவ அவரது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கோண்டது.

இதனிடையே, சியூவிற்கு நேர்ந்த அனுபவம் குறித்து இணையவாசிகள் பலரும் வெஸ்ட்ஜெட் நிறுவனத்தைச் சாடியுள்ளனர்.

வெஸ்ட்ஜெட், கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட விமான நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்
விமானம்பயணம்மெக்சிகோ