விமானத்தைத் தரையிறக்க உதவிய பயணி

விமானத்தைத் தரையிறக்க உதவிய பயணி

1 mins read
89894edf-0658-48d4-b9eb-6ad86e640a4f
லாஸ் வேகசில் இருந்து கொலம்பஸ் நோக்கிச் சென்ற சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் குறிப்பிட்டன. படம்: ஊடகம் -

உடல்நலம் குன்றி, கிட்டத்தட்ட சுயநினைவை இழக்கும் நிலைக்கு விமானி சென்றுவிட்டதையடுத்து, விமானத்தில் இருந்த பயணி ஒருவரே அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அப்பயணியும் ஒரு விமானிதான். ஆனால், அவர் அப்போது பணியில் இல்லை; ஒரு பயணியாக அவ்விமானத்தில் இருந்தார்.

கடந்த புதன்கிழமை லாஸ் வேகஸ் நகரிலிருந்து கொலம்பஸ் நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் குறிப்பிட்டன.

விமானம் கிளம்பிய இரண்டு மணி நேரம் கழித்து, அவ்விமானத்தின் முதன்மை விமானிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

இதனையடுத்து, இன்னொரு விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றும் அப்பயணி விமானி அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த இன்னொரு விமானியுடன் இணைந்து செயல்பட்டு, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவினார்.

விமானம் மீண்டும் லாஸ் வேகசுக்கே திரும்பச் சென்றது. பின்னர் அது வேறு சிப்பந்திகளுடன் கொலம்பஸ் புறப்பட்டுச் சென்றது.

பணியில் இல்லாதபோதும் பேரிடரைத் தவிர்க்க உதவிய அவ்விமானிக்கு சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொண்டது.