கத்தார் விமானத்தில் மயங்கிவிழுந்த பயணிகள்

1 mins read
e2c47a65-271d-4d74-9c54-83a01441672a
கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பப் பிரச்சினையால் புறப்பட முடியாமல் போனது. குளிரூட்டு வசதி இல்லாமல் அதிலிருந்த பயணிகள் அவதிக்கு ஆளாயினர். - படங்கள்: இன்ஸ்டகிராம்

தோஹா: ஏதென்சிலிருந்து தோஹாவுக்குப் புறப்படவிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், அதிலிருந்த பயணிகள் திங்கட்கிழமையன்று (ஜூன் 10) மூன்று மணி நேரத்திற்கும் மேல் அனலில் சிக்கித் தவித்தனர்.

கிரீசில் கடும் வெப்ப அலை ஏற்பட்டதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிரீசில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியசைத் தொட்டது.

விமானத்தின் குளிரூட்டு வசதி செயலிழந்ததால், சில பயணிகள் சட்டையின்றி இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மற்ற சிலர் கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்தனர்.

பயணிகளால் சில மணி நேரத்திற்கு வெளியேற முடியவில்லை என்றும், அதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் ‘பேங்காக் போஸ்ட்’ தெரிவித்தது.

விமானத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததால், சில பயணிகளின் மூக்குகளிலிருந்து ரத்தம் கசிந்தது. வேறு சிலர் மூச்சு விடுவதற்காக உயிர்வாயு முகக்கவசங்களை அணிந்துகொண்டனர்.

அதோடு, சில குழந்தைகள் அழத் தொடங்கியதாக பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.

விமானத்தில் நடந்தவற்றைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்படவிருந்தது. அதன் பிறகுதான் விமானத்திலிருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“கியூஆர்204 ரக விமானத்தில் பயணம் செய்தோரிடம் தாமதத்திற்காக கத்தார் ஏர்வேஸ் முழுமனத்தோடு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது,” என்று நிறுவனப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்