சிலாங்கூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் மற்றொரு நோயாளியை கத்தியால் குத்தியுள்ளார். குத்தப்பட்ட நோயாளிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருந்ததாகவும், அச்சமயம் மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
காயமடைந்த நோயாளி மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் டெங்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்ததாக அறியப்படுகிறது. அவரை தாக்கிய நோயாளி மனநோயால் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது.
செலாயாங் எனும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் வெகுநேரமாக காத்திருந்ததாகவும் இதனால் அவர் கோபமடைந்து மற்றொரு நோயாளியைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
காயமடைந்தவர் வயிற்றில் கத்தி சிக்கிக்கொண்டதால், அதை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவில் பொது மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கையாள முடியாமல் திணறுவதாக அண்மையில் புகார்கள் எழுந்துள்ளன.

