மலேசியாவின் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் அவதி

மலேசியாவின் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் அவதி

2 mins read
5be77a13-5a8e-4a3e-aa00-6013cf4e8dc2
மலேசியாவில் பொது மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கையாள முடியாமல் திணறுவதாக தி ஸ்டார் செய்தி தெரிவித்துள்ளது. படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் பொது மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கையாள முடியாமல் திணறுவதாக தி ஸ்டார் செய்தி தெரிவித்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிலர் தங்கள் 'ஐவி' பைகளைத் தாங்களே தூக்கிக்கொண்டு நிற்கின்றனர், உட்கார இடமில்லாமல் சிலர் நிற்கின்றனர், சிலர் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். படுக்கைகள் இல்லாததால் வேறு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று சமூக ஊடகப் பதிவுகள் கூறுகின்றன.

ஒப்பந்த மருத்துவர்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் @HKontrak என்ற குழு, ஜனவரி 18ஆம் தேதி கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழியும் அவசர சிகிச்சைப் பிரிவின் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

உச்ச நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 100 நோயாளிகள்வரை காத்திருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட 24 மணி நேரத்திற்கும் மேலாகிறது என அப்பதிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய தனது மகனுக்கு கிளந்தான் பாசிர் மாஸ் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஏமாற்றம் குறித்து திருவாட்டி அசிமா அப்துல்லா ஜவாவி, ஜனவரி 17 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

"எனது மகன் விபத்தில் சிக்கியதை அறிந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். முகத்தில் ரத்த வடிய, என் மகன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான். உடம்பில் வாந்தி வடிந்திருந்தது. உடையெல்லாம் ரத்தத்தில் நனைந்திருந்தது.

"சிகிச்சையின்போது (வாய் காயங்களைத் தைக்க), கிட்டத்தட்ட 30 முதல் 40 நிமிடங்கள் வாயைத் திறந்தபடி மேற்பார்வையின்றி அவன் தனியாக விடப்பட்டான்," என்று அவர் கூறினார்.

சிகிச்சை அளித்த மருத்துவர் அவனை மருத்துவமனையில் சேர்க்காததால், தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். அங்கு, அவரது மகனின் தையல்கள் மீண்டும் சரி செய்யப்பட்டன. முன்னர் கவனிக்கப்படாத வயிற்றில் ஏற்பட்டிருந்த காயமும் சுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதார அமைச்சிடம் புகார் செய்யப்போவதாக திருவாட்டி அசிமா கூறினார்.

நிபுணத்துவ சிகிச்சை மருத்துவமனைகளும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

பிரச்சினைகளுக்கு தமது அமைச்சு விரிவான தீர்வுகளைக் கண்டறியும் என்று சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

வேலை நேரத்தை நீட்டித்தல், படுக்கை நிர்வாக அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல், கூடுதல் சுகாதார சேவை வழங்குவோரை பணியில் சேர்ப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

போதிய இடவசதி உள்ள மருத்துவமனைகளில் "குறுகிய கால வார்டு" அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

"மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அதிக மனிதவளத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றார் அவர்.