‘தமிழ் முரசு’ செய்தியாளர்களின் பார்வையில் தலைமுறைகள் கடந்த நாட்டுப்பற்று

‘தமிழ் முரசு’ செய்தியாளர்களின் பார்வையில் தலைமுறைகள் கடந்த நாட்டுப்பற்று

3 mins read
95a0d44a-aa9d-4135-afc3-c452f4a09c21
தமிழ் முரசின் மூன்று தலைமுறைச் செய்தியாளர்கள், வீ. பழனிச்சாமி, இளவரசி ஸ்டீஃபன், கீர்த்திகா ரவீந்திரன். - படம்: செய்யது இப்ராகிம்
Google News Preferred Icon

கம்போங் எனும் எளிய தொடக்கத்திலிருந்து விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கட்டடங்களாக நிமிர்ந்து நிற்கும் சிங்கப்பூரின் வளர்ச்சி ஒப்பற்ற தியாகங்களின் காவியம். 

தேசிய தினத்தை முன்னிட்டு, சரித்திரம் ஆகிப்போன தலைவர்கள், வரலாறாக மாறிய வாழ்க்கைப் பயணங்கள் என ‘தமிழ் முரசு’ நாளிதழின் மூன்று தலைமுறைச் செய்தியாளர்கள் தங்களது மறக்க முடியாத தேசிய தின அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ் முரசின் இணை ஆசிரியரும் மூத்த செய்தியாளருமான திரு வீ. பழனிச்சாமி, நான்கு பிரதமர்களின் காலகட்டத்தைக் கண்டவர். 

1966ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கப்பூரின் முதலாவது தேசிய தின அணிவகுப்பை நெகிழ்ச்சியுடன் விவரித்தார் அவர்.

“பெரு மழையிலும் தளராது நின்ற வீரர்கள், குடை பிடித்தபடி மழையில் நனைந்தவாறே அணிவகுப்பைப் பார்வையிட்ட அன்றைய அதிபர் திரு யூசோப் இஷாக் என தலைவர்கள் முதல் குடிமக்கள் வரை உறுதியாக நின்றிருந்த அந்தத் தருணம், மக்கள் பட்ட துயரை எல்லாம் அந்த வான்மழையே நீர்க் கொண்டு வாரிச்சென்றுவிட்ட அடையாளமாக அமைந்தது,” என்று நெகிழ்ந்தார்.

கொடி மரியாதை தமக்கு பிடித்த அங்கம் என்ற திரு பழனி, ‘‘பிரதமர் மரியாதை மேடைக்கு வரும்போது பின்னணியில் உள்ள படைப்பிரிவுக் கொடிகள் தலைவணங்கும்.

“ஆனால், நாட்டின் தலைவரான அதிபர் மேடைக்கு வரும்போது, நான்கு முதன்மைக் கொடிகள் உட்பட அனைத்துக் கொடிகளும் தலைவணங்கி மரியாதை செலுத்தும். இது ராணுவப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான அங்கம்,’’ என்று விவரித்தார்.

முன்னோடித் தலைவரின் இறுதி வருகையும் அதிர்ந்த அரங்கமும்

செய்தியாளர்கள் நினைவில் அடுத்த முக்கிய இடம் 2014ல் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பிற்குக் கிடைத்தது. அது நாட்டின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ பங்கேற்ற இறுதி தேசிய தினம். 

“உடல்நலக் குறைவினால் அந்த ஆண்டு திரு லீ வருவாரா, மாட்டாரா என்று மக்கள் தவித்துக்கொண்டிருந்த வேளையில், சிவப்புச் சட்டையில் அரங்கிற்குள் அவர் நுழைந்தபோது ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது.

‘‘செய்தி சேகரிக்க சென்றேன் என்பதையும் கடந்து நானும் கைதட்டினேன். மக்களுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அத்தலைவனைக் கண்டு பலரின் கண்களில் கண்ணீர் வழிந்தது,” அதை இப்போது கூறும்போதும் மெய் சிலிர்க்கிறது.

மாறும் ஊடகச் சூழலும் தொடரும் பெருமையும்

இன்றைய தலைமுறை செய்தியாளர் திருமதி கீர்த்திகா ரவீந்திரன், சிறுபிள்ளையாக இருந்தபோது திரையில் கண்டுகளித்த தேசிய தினத்தை இன்று செய்தியாளராக நேரடியாகப் பார்ப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மிகுந்துள்ள இச்சூழலில் தேசிய தினச் செய்திகளைச் சேகரிக்கும் சவால்களையும் அனுபவங்களையும் அவர் விவரித்தார். 

“செய்திகளை மட்டும் எழுதி அனுப்பிய காலம் போய், இன்று சமூக ஊடகங்களுக்காக உடனுக்குடன் காணொளி நேரடிப் பதிவுகளையும் வழங்குவது சவாலானது,” என்றார். மேலும் கடந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் நாட்டிற்கான கனவு குறித்து எழுதும்படி கேட்டது தமக்கு மிகவும் பிடித்திருந்தது என்றவர், ‘‘சிங்கப்பூரர்களின் ஆசையே சிங்கப்பூருக்கான ஆசை. அவ்வகையில் காலம் மாறினாலும் தேசிய தினம் என்பது மக்களின் ஒற்றுமையையும், எதிர்காலக் கனவுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி.

அவ்வகையில் அதனை ஒற்றை இடத்தில் காண்பது வார்த்தையில் விவரிக்கவே முடியாது,’’ என்று புன்னகைத்தார் கீர்த்திகா. “தொடுவானம் நோக்கி முன்னேறட்டும் சிங்கப்பூர்!” என்ற முழக்கத்தோடு, செய்தியாளர் கலந்துரையாடல் நிறைவுற்றது.

குறிப்புச் சொற்கள்