அமைதி ஒப்பந்தம் பெருமளவு நிறைவுசெய்யப்பட்டது: அதிபர் டிரம்ப்

அமைதி ஒப்பந்தம் பெருமளவு நிறைவுசெய்யப்பட்டது: அதிபர் டிரம்ப்

1 mins read
d4021446-37b1-49ce-91d1-b2df4d6f58c5
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: ஈரானுடன் செய்யப்படக்கூடிய அமைதி ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே 23) தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. ஹோர்முஸ் நீரிணை விரைவில் வர்த்தகத்துக்குத் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது என்று அதிபர் டிரம்ப் அவரது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டாலும் ஈரானிய ஊடகமான ‘ஃபார்ஸ்’ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

புரிந்துணர்வு உடன்பாடு மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. போரை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருதல், ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையைத் தீர்த்தல், முழு அமைதி ஒப்பந்தத்துக்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்குதல் ஆகியன அவை.

அமெரிக்கா அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால் ஹஜ்ஜுப் பண்டிகை விடுமுறைகளுக்குப் பிறகு மே 29ஆம் தேதி மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் கூறினார்.

இதற்கிடையே பேச்சுவார்த்தைகளின்போது, அதனிடம் சேகரித்து வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியம் கையிருப்புகளை ஈரான் கைவிட ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைதி உடன்பாட்டில் அமெரிக்கா ஈரானுக்கு விதித்த நிபந்தனைகளில் இது மிக முக்கிய ஒன்றாகும். மேல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அதன் உள்ளடக்கங்கள் தெரிவிக்கப்படும் என்று அறியப்படுகிறது. ஈரான் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்