வாஷிங்டன்: ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை ஊக்குவிக்கும் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாட்டு நிறுவனத் (ஐநா) தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் தனிப்பட்ட தூதர் ஒருவர் ஈரான் செல்லத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு போன்ற அம்சங்களின் அடிப்படையிலேயே அவரது பயணம் அமையும் என்று ஐநா கூறியது.
இதன் தொடர்பில் திரு குட்டரெஸ், தமது சிறப்புத் தூதராகத் திரு ஜீன் அர்னால்ட்டைச் சென்ற மாதம் நியமித்ததாகத் தெரிகிறது. திரு அர்னால்ட் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) மத்திய கிழக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது பயணத் திட்டம் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கலந்துரையாடல் நடத்தும் பொருட்டு அந்தச் சிறப்புத் தூதர் டெஹ்ரானுக்குச் சென்றுகொண்டிருப்பதாக ஈரானுக்கான ஐநா தூதர் அமிர் சையது இரவானி, செவ்வாய்க்கிழமை, ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறப்பது தொடர்பில் தாம் விதித்திருந்த காலக்கெடு நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “ஒரே இரவில் ஒரு நாகரிகமே மடியப் போகிறது,” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆனால், அந்த காலக்கெடு முடிவடையச் சில மணி நேரமே எஞ்சியிருந்த நிலையில், இருவாரச் சண்டை நிறுத்தம் தொடர்பில் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையைத் தாங்கள் மறுஆய்வு செய்வதாக ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இவ்வேளையில் ஐநா தூதார் இரவானி, ஈரானியப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் திரு குட்டரெஸ் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்றுள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பான இந்தப் போருக்கு நீடித்த தீர்வுகாண்பதற்குப் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு தரப்புகளின் அரசதந்திர முயற்சிகள் தொடர்பில் ஆக்ககரமாகச் செயலாற்ற ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

