ஈப்போ: மலேசியாவின் பல இன மக்கள் அனுபவிக்கும் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், அது நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படைத் தூணாகும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான்கள், கடசான்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், மலேசியா அமைதியாக இருக்கும் ஆற்றலில் தனித்துவமானது என்று திரு அன்வார் கூறினார்.
“இந்தத் தனித்துவம், பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது கலாசார நடன நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது. அங்கு ஒற்றுமையின் அடையாளமாகப் பன்முகத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறது.
“மலேசியா முன்னேறவும், பொருளியல் வளர்ச்சியை அனுபவிக்கவும், கல்வியை மேம்படுத்தவும், சிறந்த மருத்துவமனைகளைக் கொண்டிருக்கவும் வேண்டுமென்றால், இந்த நாட்டில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நமது சமூகத்திற்கும் நமது குழந்தைகளுக்கும் காட்ட விரும்புகிறோம்,” என்றார் திரு அன்வார்.
“எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான அம்சம் அமைதி. நாம் சண்டையிட்டால், ஒரு பணக்கார தேசம்கூட அழிக்கப்படலாம். எனவே, ‘கொங் ஸி ஃபா சாய்’ உணர்விலும், இது குதிரையின் ஆண்டாகவும் இருப்பதால், இது ‘ஓங்’ (நல்ல அதிர்ஷ்டம்) ஆண்டாக இருக்கட்டும்,” என்று அவர், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அன்று ஈப்போவிலுள்ள எஸ்.ஜே.கே.சி சோங் ஹுவா காந்தன் பாருவில் நடைபெற்ற பிரதமரின் சீனப் புத்தாண்டு நிகழ்வில் ஆற்றிய உரையில் கூறினார்.
வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங், கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதே நிகழ்வில், கம்போங் பாரு காந்தனில் உள்ள பொது வசதிகள், வீடுகளுக்கான சாலை மறுசீரமைப்புப் பணிகள், மேம்பாடு, பழுதுபார்ப்பு ஆகியவற்றிற்கு நிதியளிப்பதற்காக வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சின் ஒதுக்கீட்டில் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள காசோலையை அன்வார் வழங்கினார் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.
இதற்கிடையே, ஈப்போ, தம்சோங் ரம்புத்தானில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் அன்வார், மலேசியா அமைதிப்பூங்காவாகத் தொடர வேண்டும், சட்டத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டுப் பிரச்சினைகள் மதியுடனும் மரியாதையுடனும் தீர்க்கப்பட வேண்டும், மோதலால் அல்ல என்றார் அவர்.
அனுமதி பெறாத வழிபாட்டுத் தலங்கள் போன்ற சிக்கல்கள், துணிச்சலுடனும், விவேகத்துடனும், உறுதியுடனும் கையாளப்படும் என்றும் அதேவேளையில், நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

