இஸ்ரேல் - லெபனான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் - லெபனான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

2 mins read
fb98ac4a-f720-4288-9ea5-c63eb0bb1a57
ஈரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லெபனானின் சாலைகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மீண்டும் புதிதாக அமைதிப் பேச்சுவார்த்தைத் தொடங்குகிறது.

இருநாட்டு அதிகாரிகளும் அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது லெபனான் குறித்துப் பேசப்பட்டது. இருப்பினும், லெபனான் இஸ்ரேலுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறது.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் மார்ச் 2ஆம் தேதி முதல் மோதல் வெடித்தது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலைத் தாக்கினர்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் லெபனானை நிலம் வழியாகவும் வான் வழியாகவும் தாக்கியது. இதில் 4,000க்கும் அதிகமான லெபனானிய மக்கள் மாண்டனர்.

பின்னர் ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேல்-லெபனான் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு எட்ட நான்கு முறை பேச்சுவார்த்தை நடந்தன. ஆனால் அது அவ்வளவு பலன் தரவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வர உலக நாடுகள் விரும்புகின்றன.

இஸ்ரேலுடன் நேரடியாகப் பேசினால்தான் சரியான முடிவுகள் கிடைக்கும் என்று லெபனான் நம்புகிறது. அதேபோல் லெபனானிலிருந்து அனைத்து விதமான ராணுவப் படைகளை இஸ்ரேல் மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆனால், இதை இஸ்ரேல் மறுப்பதாகக் கூறப்படுகிறது. தெற்கு லெபனானில் உள்ள தங்களது ராணுவப் படை எப்போதும் அங்குதான் இருக்கும் என்று இஸ்ரேல் பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ராணுவப் படைகளை உடனடியாக மீட்டுக்கொள்ளவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று லெபனான், அமைதிப் பேச்சுவார்த்தையின் போது அழுத்தம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலைப் பொருத்தவரை ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதத்தைக் கைவிட்டு அதன் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதை ஹிஸ்புல்லா கடுமையாக எதிர்க்கிறது.

குறிப்புச் சொற்கள்
லெபனான்இஸ்‌ரேல்ஈரான்