சமரசப் பேச்சு: அமெரிக்கத் தூதர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

சமரசப் பேச்சு: அமெரிக்கத் தூதர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

2 mins read
4bb64f54-b0c1-400b-9411-0dfe934cb22f
ஏப்ரல் 23ஆம் தேதி இஸ்ரேல் தாக்கியதில் லெபானின் டையர் நகரில் உள்ள ஒரு உணவகம் உருத்தெரியாமல் போனது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பாகிஸ்தானில் சமரசப் பேச்சில் கலந்துகொள்ளவிருந்த இரண்டு அமெரிக்கத் தூதர்களின் பயணத்தை (ஏப்ரல் 25) சனிக்கிழமை அன்று அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

பாகிஸ்தான் அதிகாரிகளிடம் மட்டும் பேசிய பிறகு ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பின் அறிவிப்பு வெளியானது.

இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான நம்பிக்கை மங்கிவிட்டது.

மற்றொரு நிலவரத்தில், அமைதிப் பேச்சு நடக்காத நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு லெபானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்க தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்தது.

இது, இஸ்ரேல்-லெபனான் இடையிலான மூன்று வாரகால போர் நிறுத்தத்தையும் பாதித்துள்ளது.

புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அதிக பயணச் செலவுகள் காரணமாகவும் ஈரானின் அண்மைய அமைதிக்கான பரிந்துரை போதுமானதாக இல்லாததாலும் அமெரிக்கத் தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப், ஜெரார்ட் குஷ்னர் ஆகியோரின் இஸ்லாமாபாத் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறினார்.

வாஷிங்டன் திரும்புவதற்காக சனிக்கிழமை (ஏப்ரல் 25) ஏர் ஃபோர்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பேசிய அவர், ஈரானின் முன்மொழிவு மேம்பட்டுள்ளது, ஆனால் போதுமானதாக இல்லை என்றார்.

திரு டிரம்ப் தமது சமூக ஊடகப் பதிவில் ஈரானின் தலைமைக்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலும் குழப்பமும் நிலவுவதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இது பற்றி ஈரான் கருத்து எதையும் வெளியிடவில்லை.

“யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. நம்மிடம் உரிய அதிகாரம் உள்ளது. அவர்களிடம் அது இல்லை. அவர்கள் பேச விரும்பினால் அழைத்துப் பேசலாம்,” என்று ட்ருத் தளத்தில் அவர் எழுதியிருந்தார்.

முன்னதாக பாகிஸ்தானுக்கு வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இதர அதிகாரிகளுடன் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றம் ஏற்படாததால் அவர் இஸ்லாமபாத்தைவிட்டு வெளியேறினார்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்ஈரான்பேச்சுவார்த்தை