ஜார்ஜ்டவுன்: உண்மையான மருத்துவ உபகரணத்தைப் போலவே சிரிஞ்சுடன் (Syringe) விற்கப்படும் ஜெல்லி போன்ற பொம்மைக்கு, பாதுகாப்பு கருதி பினாங்கு அரசாங்கம் தடை விதித்தது.
உள்ளூர் நகராட்சி மன்ற விதிகளின்படி, அவற்றை விற்பனை செய்வோருக்கு S$80 (250 ரிங்கிட்) அபராதம், வர்த்தக உரிமம் ரத்து, பொருள்கள் பறிமுதல் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஒருவகை மன உளைச்சலைத் தீர்த்துக்கொள்ள அவ்வகை விளையாட்டு பொம்மைகள் பயன்படுகின்றன. தண்ணீர் அல்லது காற்றை ஊசி போன்ற கருவிகளின் வழி பொம்மைகளுக்குள் செலுத்தி பின் பொம்மையை அழுத்தும்போது, அதிலிருந்து குமிழிகள் ஓசையுடன் உடையும்.
உண்மையான மருத்துவ ஊசி போன்றவற்றின் நுனிப்பகுதி, குழந்தைகளுக்குக் காயத்தையும் பலவித ஆபத்துகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்று பினாங்கு சுகாதார அமைப்பின் தலைவர் டேனியல் கூய் தெரிவித்தார்.
அசல் மருத்துவக் கருவிகளைப் போல் வடிவமைக்கப்பட்ட அவற்றில் ‘பயன்படுத்தியபின் வீசிவிடவும்’ என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டிருப்பது பலருக்கு மாற்று எண்ணங்களை உருவாக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தவறாகப் பயன்படுத்தினால் மாதிரி ஊசிகள் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்தப் பொம்மைகள் கோழிகள் போன்ற வடிவங்களிலும் மனித முகங்கள், மூக்கு மற்றும் பிற உருவங்களைப் போன்ற வடிவமைப்புகளிலும் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

