ஜார்ஜ் டவுன்: விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், கூடுதல் அனைத்துலக நிகழ்வுகளை ஈர்த்தல், ஜார்ஜ் டவுனின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட தனது சுற்றுலாத் திட்டங்களை வலுப்படுத்த, 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் ஆதரவை பினாங்கு மாநிலம் கோருகிறது.
சுற்றுலாத் துறையின் மதிப்பை அதிகரிப்பதையும் அதே வேளையில் அதன் வளர்ச்சி உள்ளூர் பொருளியல், சமூகத்திற்குத் தொடர்ந்து பயனளிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த முன்னுரிமைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாநிலச் சுற்றுலா, படைப்பாற்றல் பொருளியல் குழுவின் தலைவர் வோங் ஹான் வாய் தெரிவித்தார்.
ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு போன்ற முக்கியச் சந்தைகளிலிருந்து பினாங்குக்கு அதிக நேரடி விமானச் சேவைகளை ஈர்ப்பதற்காக, தொகைக்கு தொகை ஈடுகட்டும் மானியங்கள் உள்ளிட்ட ‘அனைத்துலக விமான இணைப்பு நிதியை’ உருவாக்குவது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
“பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அதன் பயணிகளைக் கையாளும் வருடாந்தர திறன் 12 மில்லியனாக இரட்டிப்பாகவுள்ள நிலையில், புதிய வழித்தடங்கள், அதிகரித்த விமானச் சேவைகள் வாயிலாக அந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை,” என்று அவர் பெர்னாமா ஊடகத்திடம் தெரிவித்தார்.
அறிக்கைகளின்படி, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கம், மேம்படுத்தும் திட்டம் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக மாநாடுகள், கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், பெரிய அளவிலான கலை, கலாசார நிகழ்வுகளை ஈர்ப்பதற்கும் அவற்றை நடத்துவதற்கான ஏலங்களில் பங்கேற்பதற்கும் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவியைப் பெற பினாங்கு மாநிலம் முயன்று வருவதாகத் திரு வோங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வர்த்தக நிகழ்வுகள் சுமார் 1.91 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், புதிய வசதிகள், அதிகரித்த கொள்ளளவு ஆகியவற்றின் மூலம் வர்த்தகம், முக்கிய நிகழ்வுகளுக்கான ஒரு முக்கிய வட்டார மையமாகத் திகழும் பினாங்கின் திறனை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
“நாங்கள் கட்டடங்களை மட்டும் பாதுகாக்க விரும்பவில்லை. சுற்றுலா, ஆக்கபூர்வமான பொருளியல் மூலம் புதிய பொருளியல் செயல்பாடுகளை உருவாக்கும் அதே வேளையில் பாரம்பரியம், கலாசாரம், உள்ளூர் சமூகங்கள் தொடர்ந்து செழித்து வருவதை உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்றும் அவர் விவரித்தார்.
