பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் மின்நுழைவாயில்கள் பிப்ரவரி மாதம் திறப்பு

2 mins read
47d75a56-8b61-4a59-a88b-33de0f105be4
மின்நுழைவாயில்களைத் தற்போது சோதித்து வருவதாகப் பினாங்கின் சுற்றுப்பயணத்துறை, புத்தாக்கப் பொருளியல் குழுத் தலைவர் வோங் ஹோன் வாய் தெரிவித்தார். - படம்: த ஸ்டார்

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளுக்கான மின்நுழைவாயில்கள் வரும் பிப்ரவரி மாதம் திறக்கப்படவிருக்கின்றன.

சீனப் புத்தாண்டுக்கு முன்பு அவை நடப்புக்கு வரும்.

மின்நுழைவாயில்களைத் தற்போது சோதித்து வருவதாகப் பினாங்கின் சுற்றுப்பயணத்துறை, புத்தாக்கப் பொருளியல் குழுத் தலைவர் வோங் ஹோன் வாய் தெரிவித்தார்.

பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளுக்கான குடிநுழைவு முனையங்களில் பயணிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த மின்நுழைவாயில்கள் உதவும் என்றார் அவர்.

“பயணிகளின் புறப்பாட்டுக் குடிநுழைவுப் பகுதியில் உள்ள ஐந்து மின்நுழைவாயில்கள் சோதிக்கப்படுகின்றன. தற்போது, அவற்றை மலேசியப் பயணிகள் பயன்படுத்துகின்றனர். கூடிய விரைவில் அவை அனைத்துப் பயணிகளுக்கும் திறந்துவிடப்படும்.

“பயணிகள் நுழைவுப்பகுதியில் மேலும் ஆறு மின்நுழைவாயில்களைப் பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன,” என்று விமான நிலையத்தில் மின்வாயில்களைப் பொருத்தும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார் திரு வோங்.

புதிய அணுகுமுறை, ஒவ்வொரு பயணிக்கான குடிநுழைவு நடைமுறைகளை ஏறத்தாழ ஆறு நிமிடங்கள் வரை குறைக்கும் என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பிறகு, இந்தத் தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு முறை அறிமுகப்படுத்தும் இரண்டாவது விமான நிலையமாக பினாங்கு அனைத்துலக விமான நிலையம் திகழும்.

மின்நுழைவாயில்களைச் சோதிக்கும் பணிகள் பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதை அவை மிகவும் முக்கியமானவை என்று மலேசியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைமை இயக்குநர் இஸ்மாயில் மொக்தார் தெரிவித்தார்.

“இது நாடு தழுவிய மேம்பாட்டுத் திட்டம். 635 புதிய மின்நுழைவாயில்கள் பொருத்தப்படுகின்றன. அவை விமான நிலையங்களில் மட்டுமல்ல, மற்ற சோதனைச்சாவடிகளிலும் பொருத்தப்படும்,” என்று திரு இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்