ஜார்ஜ் டவுன் - சுமத்ராவின் வடக்குப் பகுதியை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் பினாங்கிலும் பின் அதிர்வுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) உணரப்பட்டன. பிற்பகல் 4.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பல பினாங்கு மக்களால், குறிப்பாக உயர் மாடிக் கட்டடங்களில் வசிப்போர் உணர முடிந்தது.
புலாவ் டிக்குசில் வசிக்கும் 36 வயது திரு ஆரன் டான், 7வது மாடியில் வசிக்கிறார். அவர், “கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கும் அதிகமான நிலநடுக்கத்தை உணர்ந்தேன். என்னுடைய நாற்காலிகூட அசைந்தது,” என்றார்.
ஜாலான் மஸ்ஜிட் கெபிட்டன் கெலிங்கில் வேலை செய்துகொண்டிருந்த 45 வயது திரு கே. சிவா, முதல் மாடியில் அதிர்வுகளை உணர்ந்ததாகச் சொன்னார். முதலில் அதைக் கற்பனை என்று நினைத்த அவர், பிறகு நண்பர்கள் மூலம் தாம் உணர்ந்ததை உறுதிபடுத்திக் கொண்டார்.
தஞ்சோங் பூங்காவில் உள்ள உயர் மாடி கூட்டுரிமை வீட்டில் வசிக்கும் திருவாட்டி அரிஸா, சமையலறையில் இருந்தபோது அலமாரி கிட்டத்தட்ட 20 விநாடிகளுக்கு அசைந்ததைக் கண்டதாகச் சொன்னார்.
மலேசிய வானிலைப் பிரிவு, நிலநடுக்கம் 74 கிலோமீட்டர் ஆழத்தில், அச்சே மாநிலத்தின் மெலபோவுக்கு தென்கிழக்கில் ஏறக்குறைய 107 கிலோமீட்டார் தூரத்தில் மையம்கொண்டதாக அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

