ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் தஞ்சோங் புங்கா பகுதியிலுள்ள சொகுசுக் கூட்டுரிமை அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் இயங்கிவந்த அழைப்பு நிலையத்தில் பினாங்கு காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 30) திடீர்ச் சோதனை நடத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இணையம் மூலம் ஜப்பானுக்கான சுற்றுப்பயணத் தொகுப்புத்திட்டங்களை வழங்கிவந்த மோசடிக் கும்பலின் நடவடிக்கைகளை அது முறியடித்துள்ளது.
வடகிழக்கு மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் தஞ்சோங் தோக்கோங் காவல் நிலையமும் இணைந்து மாலை 4.45 மணி அளவில், வெளிநாடுகளைச் சேர்ந்த 25 முதல் 37 வயதிற்குட்பட்ட ஏழு ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரொசாக் முகம்மது தெரிவித்தார்.
“அழைப்பு நிலையத்தில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல்வேறு கணினிகளும் தொலைத்தொடர்புச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன,” என்றார் அவர்.
அந்தக் கும்பல் சீனாவையும் தைவானையும் சேர்ந்தவர்களைக் குறிவைத்து ஜப்பானுக்கான சுற்றுப்பயணத் திட்டங்களை வழங்கியதாகத் திரு அப்துல் ரொசாக் கூறினார்.

