ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டத்துக்கான ஏபிஐ குறியீடு 100ஐத் தாண்டினால் வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ரத்து செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறியீடு 200ஐத் தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் உடனடியாக மூடப்படவேண்டும். ஏபிஐ குறியீடு 500ஐத் தாண்டினால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஊழியர்கள் வேலைக்குப் போகத் தேவையிருக்காது.
இவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) பிற்பகல் ஏபிஐ குறியீடு அபாயக் கட்டத்தைத் தொட்டதாகப் பினாங்குக் கல்விப் பிரிவு இயக்குநர் முகம்மது ஸியாவ்தீன் மாட் சாட் தெரிவித்தார். சுற்றுப்புறப் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி அவர் தகவல் வெளியிட்டார்.
“நாங்கள் ஏபிஐ குறியீட்டை அடிக்கடி கண்காணித்துவருகிறோம். கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி ஏபிஐ குறியீடு 1100ஆகப் பதிவாகியுள்ள இடங்களில் பள்ளிகள் தொடர்ந்து இயல்பாகச் செயல்படும். ஆனால், மாணவர்கள் ஈடுபடும் வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக நிறுத்தப்படும்,” என்று அவர் வியாழக்கிழமை இரவு பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஏபிஐ குறியீடு 200க்குக்கீழ் குறைந்தால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


