ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கார் கழுவும் நிலையத்தில் ஆடவர் ஒருவர் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
நிபோங் தெபால் என்னும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து அன்று இரவு 10.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பினாங்கு மாநில காவல்துறைத் துணை ஆணையர் முஹம்மது ஆல்வி ஸைனல் ஆபிதின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
“சரமாரியாகத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர் 30களில் உள்ள உள்ளூர் ஆடவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது உடலிலும் கால்களிலும் பலமுறை சுடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
“சந்தேக நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி, கார் நிலையத்தில் இருந்த ஆடவருக்கு நெருக்கமாகச் சென்று சரமாரியாகச் சுட்டார்.
“மற்றோர் ஆடவர் மோட்டார்சைக்கிளில் காத்திருந்தார். இரு சந்தேக நபர்களும் கறுப்புநிற உடையும் தலைக்கவசமும் அணிந்திருந்தனர்.
“காயங்களுடன் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆடவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்,” என்று துணை ஆணையரின் அறிக்கை தெரிவித்தது.
அவர் சுடப்பட்டதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

