ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலுடன் பினாங்கு மாநிலத் தேர்தல் இணைந்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கால சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நடப்பு அரசாங்கத்தின் அதிகாரக் காலத்தை முன்கூட்டியே சுருக்குவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் மாற்றங்களால் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களை இனிமேல் ஒருங்கிணைத்து நடத்துவது கடினமாகிவிட்டது என்று பினாங்கின் பட்டர்வொர்த் பகுதியில் செய்தியாளர்களிடம் திரு சாவ் கூறினார்.
அனைத்து மாநிலங்களும் ஒரே முடிவை எடுத்தால் மட்டுமே, தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்றும் இன்னும் கணிசமான ஆட்சிக் காலம் மீதமுள்ள மாநிலங்களில் முன்கூட்டியே சட்டமன்றத்தைக் கலைப்பது வாக்காளர்களுக்குச் செய்யும் அநீதியாகும் என்றும் அவர் விவரித்தார்.
பினாங்கு சட்டமன்றத்தின் நடப்புத் தவணை முடிவடைய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது போன்ற விவகாரங்களே பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலை இணைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

