பினாங்கு: தைப்பூச வெள்ளித் தேர் குறித்த நிகழ்நேரத் தகவல் சேவை

2 mins read
ef934ecd-f3f8-4a31-9379-3df8cf20d78f
2024ஆம் ஆண்டின் செட்டிப் பூசத்திற்காக வீதிகளில் வலம்வந்த வெள்ளித்தேர். - படம்: கார்த்திக் அருள்

தைப்பூசத்திற்கு முந்தைய நாளான செட்டிப்பூசத்தின்போது (பிப்ரவரி 10) பினாங்கில் உள்ள தண்ணீர்மலை ஆண்டவரின் உற்சவத் திருவுருவம், வெள்ளித் தேரில் பினாங்கு வீதிகளைக் கோலாகலமாக வலம்வரும்.

காளை மாடுகளைப் பூட்டி இழுக்கப்படும் இந்தத் தேரைக் காண பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வீதியோரங்களில் காத்திருப்பர். அவர்கள் தேருக்குமுன் தேங்காய் உடைப்பர், அல்லது சீர்த்தட்டுகளைக் கொண்டுவந்து படைப்பர்.

தேர் எப்போது வரும் எனக் கால்கடுக்கக் காத்திருப்போருக்கு அது உலாப் பாதையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உடனுக்குடன் காட்டுகிறது தொழில்நுட்ப வல்லுநர்கள் மாணிக்கம் முருகப்பன், லீ ஸீ ஹாங் ஆகியோர் உருவாக்கிய இணையத்தளம்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த இணையத்தளத்தில் சாலை மூடல், போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் புள்ளிகள், தேருக்கான இடைநிறுத்த நேரங்கள் உள்ளிட்ட புதிய அங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதில் தகவல்களைப் பெறலாம்.

தொடக்கத்தில் ‘வாட்ஸ்அப் லைவ் லொக்கேஷன்’ (WhatsApp Live location ) சேவை மூலம் தேர் நகரும் இடத்தைப் பகிர்ந்த மாணிக்கம், இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி www.chariottracker.com என்ற இணையத்தளத்துடன் அதை ஒருங்கிணைத்தார்.

பினாங்கில் பக்தர் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு பெருகிவருவதாலும் தேர் கோயிலுக்கு மீண்டும் சென்றடையத் தாமதமாவதாலும் இத்தகைய சேவைக்கான தேவை கூடியிருப்பதாக மாணிக்கம் நம்புகிறார்.

வழக்கமாக நள்ளிரவுக்குள் தண்ணீர்மலை ஆண்டவன் கோயிலுக்கு மீண்டும் சென்றடையும் தேர், கடந்த ஆண்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அடைந்தததை அவர் சுட்டினார்.

“ஊர்வலம் நிறைவடைய ஏறத்தாழ 20 மணி நேரம் வரை ஆகிறது. எனவே பயனீட்டாளர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வெள்ளித்தேர், தாங்கள் இருக்கும் இடத்திற்கு எப்போது வரும் என்பதைக் கணிக்கலாம்,” என்கிறார் மாணிக்கம்.

இந்தச் சேவையைக் கடந்த ஆண்டு 38,000 பேர் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

“இதனை உருவாக்குவதற்கு நாங்கள் நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். தொடக்கத்தில் எங்களுக்கு மூலதனம் பெரிதாக இல்லாததால் பழைய திறன்பேசிச் செயலிகளின் ‘ஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். தொழில்நுட்ப அடித்தளத்தை அமைத்துள்ளதால் இவ்வாண்டின் புதிய மேம்பாடுகளுக்கு ஆறு, ஏழு வாரங்கள் ஆயின,” என்று மாணிக்கம் குறிப்பிட்டார்.

பினாங்கைப் பொறுத்தவரை அனைத்து இனங்களின் ஒற்றுமையைத் தைப்பூசம் பிரதிபலிப்பதாகவும் மாணிக்கத்துடன் இணைந்து தளத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் லீ ஸி ஹாங், 26, தமிழ் முரசிடம் கூறினார்.

“இந்தியாவிலிருந்து வந்தும் பக்தர்கள் பங்குபெறும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டாக நடந்தேறும் தைப்பூசத் திருவிழாவைப் பினாங்கு மாநிலம் பெருமையாகக் கருதுகிறது,” என்றார் லீ.

குறிப்புச் சொற்கள்