பினாங்கின் 35 மரபுடைமைப் பொருள்கள் அரசிதழில் வெளியீடு

பினாங்கின் 35 மரபுடைமைப் பொருள்கள் அரசிதழில் வெளியீடு

2 mins read
22369141-75ce-4843-a9e7-a63286936ee4
நிலைகலக்கி சிலம்பம் எனும் தற்காப்புக் கலை உட்பட, கூடுதல் பாரம்பரியச் சின்னங்கள் மே 7ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட்டன. - படம்: வோங் ஹான் வாய் அலுவலகம்
Google News Preferred Icon

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநில மரபுடைமைச் சட்டம் 2011ன்கீழ், பினாங்கு அரசாங்கம் இந்த ஆண்டு ஏழு கலாசார, மரபுடைமைக் கலைப் பொருள்களையும் 28 பாரம்பரிய உணவுப் பொருள்களையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் ஆக்கபூர்வ பொருளியலுக்கான மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் வோங் ஹான் வாய், மற்றொரு சமயப் பாரம்பரிய நிகழ்வும் அரசிதழில் வெளியிடப்படுவதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக திங்கட்கிழமையன்று (மே 11) பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அந்தப் பாரம்பரிய நிகழ்வு, பொதுவாக ‘பசித்திருக்கும் பேய்த் திருவிழா’ என்று அழைக்கப்படும் தியோங் குவான் போர் தோர் கொண்டாட்டமாகும்.

மாநில அளவில் அரசிதழில் வெளியிடப்படும் தொட்டுணரமுடியாத கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் அனைத்தையும் 2005ஆம் ஆண்டின் தேசிய மரபுடைமைச் சட்டத்தின்கீழ் தேசிய அங்கீகாரத்திற்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்று திரு வோங் கூறினார்.

மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட மரபுடைமைக் கூறுகள், யுனெஸ்கோவின் ‘மனிதகுலத்தின் தொட்டுணரமுடியாத கலாசார மரபுடைமைப் பிரதிநிதித்துவப் பட்டியலின்’ கீழ் அனைத்துலக அங்கீகாரத்திற்காகவும் பரிசீலிக்கப்படலாம்,” என்றும் அவர் கூறினார்.

2025 மார்ச் மாதத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து சமர்ப்பித்த ஒரு பரிந்துரையின் மூலம், சிங்கே ஊர்வலத்தை யுனெஸ்கோ அங்கீகாரத்திற்காகப் பரிந்துரைப்பதை மாநில அரசு ஏற்கெனவே ஆதரித்ததை அவர் சுட்டினார்.

ஜனவரியில், 10 பாரம்பரிய உணவுகளையும் ஆறு தொட்டுணரமுடியாத மரபுடைமைப் பொருள்களையும் மாநில மரபுடைமையாகஅரசிதழில் வெளியிடுவதாகப் பினாங்கு மாநில அரசு அறிவித்தது.

தற்காப்புக் கலையான நிலைகலக்கி சிலம்பம், பாரம்பரிய உணவுகளான ஆயர் பத்து சம்போர், ஐஸ் கெபால், சப்பாத்தி, செண்டோல், சார் குவே தியோவ், கரி கபிடன், கீமா, அசாம் லக்சா, முர்தபாக், மசால் வடை, மீ கோரேங் மாமாக், முறுக்கு, புட்டு மாயாம், பரோட்டா, தேநீர், தோசை, யோங் தாவ் ஃபூ ஆகியவை மே 7ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதாக வோங் கூறினார்.

உள்ளூர் தொட்டுணரமுடியாத மரபுடைமையை உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சுற்றுலாபயணிகள்பாரம்பரியம்