கோலாலம்பூர்: பினாங்கு மாநிலத் தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள பீச் ஸ்திரீட், உலகின் ஆக சுவாரசியமான 28 நகரங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
டைம் அவுட் சஞ்சிகை இந்தப் பட்டியலை உருவாக்கியது. உலகப் புகழ்பெற்ற நகரங்களான அமெரிக்காவின் நியூயார்க், ஜப்பானின் கியோட்டோ, சீனாவின் ஷங்காய் ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளைப் பின்னுக்குத் தள்ளி பீச் ஸ்திரீட் அவ்விடத்தைப் பிடித்தது.
உள்ளூரில் லெபு பான்டாய் என்றழைக்கப்படும் ஜார்ஜ் டவுனின் பீச் ஸ்திரீட், இந்த அனைத்துலகப் பட்டியலில் இடம்பெறும் ஒரே மலேசிய சாலையாகும். பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிடப்பட்டது.
மரபை வெளிப்படுத்தும் கட்டட வடிவங்கள், சுயேச்சை வர்த்தகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் ஜார்ஜ் டவுனின் ஆகப் பழைமையான சாலைகளில் ஒன்றான பீச் ஸ்திரீட்டுக்குப் புத்துயிர் அளிக்கின்றன.
கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற விலைவாசி அதிகம் உள்ள நகரங்களிலிருந்து வந்து தொழில் தொடங்கும் இளம் மலேசியர்கள்தான் பெரும்பாலும் பீச் ஸ்திரீட் புத்துயிர் பெறுவதற்கு முக்கியக் காரணம் என்று உலகளாவிய பயண, வாழ்க்கைமுறை சஞ்சிகையான டைம் அவுட் தெரிவித்தது.
அதன் மூலம் இப்போது சுயேச்சையாகச் செயல்படும் உணவகங்கள், பழைமை வடிவம் கொண்ட கடைகள் போன்றவை பீச் ஸ்திரீட்டில் தலைதூக்கியுள்ளன. அதைத் தொடர்ந்து பாரம்பரிய மலேசிய அம்சங்களுக்கு நவீன சாயல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
