தோக்கியோ: சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.
“இருநாட்டு ராணுவத்திற்கும் போர் புரியும் திறன் உள்ளது,” என்று ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் ஜெனரல் நக்கதானியிடம் தோக்கியோவில் திரு ஹெக்செத் கூறினார். இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, பாதுகாப்புக்கு கடைசி எல்லையாக ஜப்பான் விளங்குவதாகக் கூறிய அமெரிக்க தற்காப்பு அமைச்சர், முன்னைய அமெரிக்க அரசாங்கங்கள் போல் ஆசியாவில் தனது முக்கிய நட்பு நாட்டுடன் அணுக்கமாக அதிபர் டிரம்ப்பின் கீழுள்ள அமெரிக்க அரசு செயல்படும் என்பதைக் கோடி காட்டியுள்ளார்.
ஜப்பானில் போர் விமானப் படை உட்பட கிட்டத்தட்ட 50,000 அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.
அத்துடன், இந்த வட்டாரத்தில் சீன ராணுவ வலிமையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் செயல்படக்கூடிய விமானந்தாங்கிக் கப்பலை அமெரிக்கா வைத்துள்ளது.
ஜப்பான் தனது ராணுவச் செலவை இருமடங்காக்க முற்படுகிறது. வெகுதூரம் பாயக்கூடிய ஏவுகணைகளை வாங்குவது அதன் திட்டமாக உள்ளது.
இருந்தபோதும், இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட ஜப்பான், அமெரிக்காவால் எழுதப்பட்ட தனது அரசமைப்புச் சட்டத்தின்படி ஆயுதப் படைகளை பலத்தக் கட்டுப்பாடுகளுடன் இயக்கவேண்டியுள்ளது.
இதற்கு முன்னதாக, ஜப்பானைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதிமொழி எடுத்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தம், பரஸ்பரமானது அன்று எனத் திரு டிரம்ப் குறைகூறியுள்ளார். அமெரிக்கப் படைகளுக்கு ஜப்பான கூடுதல் நிதி தரவேண்டும் என்றும் திரு டிரம்ப் அவர் கடந்த முறை முதல் தவணை அதிபராக இருந்தபோது கோரியுள்ளார்.

