தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலி வெடிகுண்டுத் தாக்குதல்: மலேசியக் கைதிகளைச் சொந்த நாடு திருப்பி அனுப்பிய அமெரிக்கா

2 mins read
5da18abc-78dc-4bba-a7cf-d98dd38b4b90
2003ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட முகம்மது நசீர் லெப் (இடது), முகம்மது ஃபரிக் அமின். - படங்கள்: தி ஸ்டார் நாளிதழ்

வாஷிங்டன்: இந்தோனீசியாவின் பாலித் தீவில் 2002ஆம் ஆண்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் பலர் மாண்டனர்.

இத்தாக்குதலுடன் தொடர்புடைய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட இரு மலேசிய ஆடவர்களை கியூபாவில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவான்டானமோ பே சிறையிலிருந்து மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க ராணுவம் டிசம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.

இந்த இருவரையும் மலேசிய அனுப்பிவைப்பதற்கு ஒருநாள் முன்பு கென்யாவைச் சேர்ந்த கைதி ஒருவரை அவரது சொந்த நாட்டுக்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு திருப்பி அனுப்பியது.

இந்த மூவரும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகு குவான்டனமோ பே சிறையில் இருப்போர் எண்ணிக்கை 27ஆகக் குறைந்துள்ளது.

மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 47 வயது முகம்மது நசீர் லெப்பும் 49 வயது முகம்மது ஃபரிக் அமினும் 2003ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர்.

அங்கு அவர்கள் தீவிரவாத கொள்கைகளைக் களையும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை மேற்பார்வையிடும் பொறுப்பை மலேசியா ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்த இருவரும் மலேசியாவுக்குச் செல்வதற்கு முன்பு ஹம்பாலி என்று அழைக்கப்படும் என்செப் நூர்ஜாமானுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.

பாலி வெடிகுண்டு தாக்குதலுக்கு ஹம்பாலி மூளையாகச் செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது.

ஹம்பாலியும் இந்த இரண்டு மலேசியர்களும் தாய்லாந்தில் மத்திய உளவுத்துறைப் பிரிவுக்குச் சொந்தமான சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2006ஆம் ஆண்டில் அவர்கள் குவான்டனமோ பே சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

2021ஆம் ஆண்டில் அந்த மூவருக்கும் எதிராக அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், மலேசியாவுக்குத் திரும்பியுள்ள முகம்மது நசீர் லெப், தமது குடும்பத்துடன் அமைதியான முறையில் வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கூடா நட்பு காரணமாகத் தமது கட்சிக்காரர் பலமுறை தண்டனை அனுபவித்துவிட்டதாக முகம்மது நசீரின் வழக்கறிஞர் பிரயன் போஃபர்ட் தெரிவித்தார்.

முகம்மது நசீரும் ஃபரிக் அமினும் மலேசியா திரும்பிவிட்டதை மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்