7 முன்னணி ‘ஏஐ’ நிறுவனங்களுடன் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு ஒப்பந்தம்

7 முன்னணி ‘ஏஐ’ நிறுவனங்களுடன் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு ஒப்பந்தம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

01 May 2026 - 10:04 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு (பென்டகன்), தனது ரகசியக் கட்டமைப்புகளில் (Classified networks) மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காக ஏழு முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை (மே 1) அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), ஓபன்ஏஐ (OpenAI), கூகல், என்விடியா (Nvidia), ரிஃப்ளெக்‌ஷன் (Reflection), மைக்ரோசாப்ட், அமேசான் வெப் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் அமைச்சு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

போர்க்களத்தில் நிலவும் சிக்கலான சூழல்களைப் புரிந்துகொள்ளவும், தரவுகளை விரைவாகத் தொகுத்துத் துல்லியமான முடிவுகளை எடுக்கவும் இந்த நிறுவனங்களின் தொழில்நுட்பம் ராணுவ வீரர்களுக்கு உதவும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம் இல்லை.

அந்நிறுவனத்தின் ‘மைத்தாஸ்’ (Mythos) எனும் செயற்கை நுண்ணறிவு மாதிரி, கணினி ஊடுருவல்காரர்களுக்கு உதவும் திறன் கொண்டது என்பதால், அது பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் ‘ஜென்ஏஐ.மில்’ (GenAI.mil) எனும் ஏஐ தளத்தை அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். கூகல் நிறுவனமும் ரகசியப் பணிகளுக்காகத் தனது ஏஐ மாதிரிகளை வழங்க, அமைச்சுடன் தனி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதற்காப்பு அமைச்சுசெயற்கை நுண்ணறிவுஒப்பந்தம்