வாஷிங்டன்: தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய உறுதியை நிறைவேற்றும் விதமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் புலம்பெயர்வோரைத் தடுக்க கிட்டத்தட்ட கூடுதலாக 3,000 ராணுவத்தினரை அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு தற்காப்பு அமைச்சு அனுப்புகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 1) தெரிவித்தனர்.
அதிக போர் அனுபவம் வாய்ந்த படைப்பிரிவான கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவின் ஆயுதமேந்திய காலாட்படையும் ஆதரவுப் படைகளும் சில நாட்களுக்குள் பணியில் அமர்த்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
ஏற்கெனவே தெற்கு எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட 9,200 படையினர் பணியில் உள்ளனர். புதிய படைகள் தற்போதைய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
எல்லைகளை மூடுவதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேறிகளை அவர்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதிலும் ராணுவத்தின் பங்கை அதிகரிப்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

