செலவுகள் அதிகரித்தாலும் மக்கள் சார்ந்த திட்டங்கள் தொடரும்: அன்வார்

செலவுகள் அதிகரித்தாலும் மக்கள் சார்ந்த திட்டங்கள் தொடரும்: அன்வார்

2 mins read
7f06697c-3588-4c64-98bc-35e11d0b88b0
செலவு அதிகரிப்பு காரணமாகப் பல பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒத்திவைக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். - படம்: பெரித்தா ஹரியான்

ஈப்போ: மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு காரணமாகப் பல பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒத்திவைக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

ஆனால் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்கள் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.

“பள்ளிக் கழிவறைகளைச் சீரமைத்தல், பள்ளி வசதிகளை மேம்படுத்துதல், ஒழுகும் பள்ளிவாசல் கூரைகளைச் சரிசெய்தல் மற்றும் ஓராங் அஸ்லி பழங்குடியினர் சமூகத்தினருக்கான வீடுகளை மேம்படுத்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும். எங்களால் என்ன முடியும் என்பதை நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் பெரிய திட்டங்கள் ஒத்திவைக்கப்படும்,” என்று பிரதமர் அன்வார் கூறினார்.

அதிகரிக்கும் செலவுகளை மேற்கோள்காட்டி, வெளிநாட்டுப் பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு தமது அமைச்சர்களுக்கு அன்வார் அறிவுறுத்தினார்.

“முன்பு, கோலாலம்பூரிலிருந்து லண்டனுக்கு விமானப் பயணக் கட்டணம் ஏறத்தாழ 7,000 ரிங்கிட்டாக இருந்தது. இப்போது அது 20,000 ரிங்கிட்டை எட்டக்கூடும்,” என்று அவர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏறத்தாழ 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

“எரிபொருள் கிடைத்தாலும், விமானங்கள் பயணத்தைத் தொடரலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஏனென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக விமானங்கள் பல விமான நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்று நியூசிலாந்துப் பிரதமர் கூறினார்,” என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

உலகப் பொருளியல் நிலைமையைச் சீராக்க இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தாம் வேண்டிக்கொள்வதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும், மலேசிய அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் கல்வித்துறையும் தொடரும் என்று பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்