பெர்ன்: சுவிட்சர்லாந்தின் வாக்காளர்கள் நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மக்களில் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அவர்களில் ஏறக்குறைய 55 விழுக்காட்டினர் பரிந்துரைக்கு எதிராகவும் 45 விழுக்காட்டினர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
வலசாரியான சுவிஸ் மக்கள் கட்சி, அந்தப் பரிந்துரையை முன்வைத்தது. குடிநுழைவுக் கொள்கைக்கு எதிராக அது நீண்டகாலமாய்க் குரல் கொடுத்துவருகிறது.
சர்ச்சைக்குரிய வாக்களிப்புக்கு அரசாங்கம், நிறுவனங்கள், மற்றப் பெரிய கட்சிகள் முதலியவை எதிர்ப்புத் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட சுதந்திர நடமாட்ட உடன்பாடு, வாக்களிப்பால் கேள்விக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற அக்கறையும் நிலவியது.
சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் பேயட் யான்ஸ், வாக்களிப்பின் முடிவை வரவேற்றார்.
“நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அறிகுறி அது,” என்றார் அவர்.
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 2002ஆம் ஆண்டிலிருந்து வேகமாக உயர்ந்துவருகிறது. அப்போது அது 7.3 மில்லியனாக இருந்தது. இப்போது அந்நாட்டின் மக்கள்தொகை 9.1 மில்லியன். மக்கள்தொகையில் 27 விழுக்காட்டினர் குடிமக்கள் அல்லாதவர்கள்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றுப்புறம் முதலியவற்றின் மீதான நெருக்குதலைக் குறைக்கும் என்று மக்கள் கட்சி வாதிட்டது. ஆனால் அந்த வாதம், போதிய வாக்காளர்களின் ஆதரவை ஈர்க்கத் தவறிவிட்டது.

