செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் பேராக் சுல்தான்

செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் பேராக் சுல்தான்

2 mins read
5521b3a6-0eb6-46b0-99c4-9dace8b844ca
மலேசியாவின் பேராக் மாநில மன்னர் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவு, மரபணுப் பொறியியல் மற்றும் பிற நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று மலேசியாவின் பேராக் மாநில மன்னர் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) தெரிவித்தார்.

அவ்வாறு செய்யாவிடில் அது மாற்ற முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்த சுல்தான் நஸ்ரின், குறிப்பாகப் பருவநிலை, சுற்றுப்புறம் போன்ற உதாரணங்களாகக் காட்டினார்.

“நாம் வாழும் இக்காலத்திலேயே இதைப் பலமுறை உணர்ந்துள்ளோம். ஆனால் அதை மறந்துவிட்டதுபோல தெரிகிறது. முதலில் உருவாக்க முற்படுகிறோம், பிறகு அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். அணுகுண்டுக்கான விதிமுறைகள் முன்வைக்கப்படுவதற்கு முன்பே அது பயன்படுத்தப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவு, மரபணுப் பொறியியல் அல்லது இந்த நூற்றாண்டின் பிற ஒன்றிணைந்த தொழில்நுட்பங்களில் இந்தத் தவற்றை நாம் மீண்டும் செய்யக்கூடாது,” என்று புத்ராஜெயா கருத்தரங்கு 2026ல் உரையாற்றிய சுல்தான் நஸ்‌ரின் கூறினார்.

‘டீப்ஃபேக்’ எனப்படும் வன்போலி, பொய்ச் செய்திகளைப் பரப்பும் தளங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவ, ஆசியான் உறுப்பு நாடுகள் செயற்கை நுண்ணறிவுக் கல்வியறிவில் அவசரமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

சமூகங்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பு சமூகத்துக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

தென்கிழக்கு ஆசியாவின் கலாசார மற்றும் சமயப் பன்முகத்தன்மையை வலியுறுத்திய சுல்தான் நஸ்ரின், ஆசியான் நாடுகள் வெறும் செயற்கை நுண்ணறிவுப் பயனர்களாக இருப்பதைத் தாண்டி, இவ்வட்டாரத்தில் அதன் பயன்பாட்டின் கட்டமைப்பாளர்களாக மாற வேண்டும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்