சுன்னத் சிகிச்சையால் நிரந்தரத் தழும்பு; சிறுவனுக்கு 359,122 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

சுன்னத் சிகிச்சையால் நிரந்தரத் தழும்பு; சிறுவனுக்கு 359,122 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

2 mins read
737ea9e0-7609-46c6-8ec4-329d3c06a4aa
சுன்னத் சிகிச்சைக்குப் பிறகு சிறுவனுக்கு வீக்கமும் ரத்தப்போக்கும் ஏற்பட்டது. - கோப்புப் படம்: பெக்சல்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் தவறான சுன்னத் சிகிச்சையில் நிரந்தரத் தழும்பை ஏற்படுத்தியதற்காக சிறுவனுக்கு 359,123 ரிங்கிட் ($113,378) இழப்பீடு வழங்க தெரங்கானு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செய்யப்பட்ட இந்தச் சிகிச்சையால் ஆண் உறுப்பில் கடுமையான தோல் இழப்பும் நிரந்தரத் தழும்பும் ஏற்பட்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கோலா நெருசில் உள்ள ‘பெருபத்தான் ஹிஜ்ரா’ மருந்தகம் அலட்சியத்துடன் செயல்பட்டதைக் கண்டறிந்த நீதிபதி வான் நூர் அக்லிமா வான் சாலே, பொது இழப்பீடாக 300,000 ரிங்கிட்டையும், எதிர்கால இழப்பீடாக 59,122.90 ரிங்கிட்டையும் வழங்க உத்தரவிட்டதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் சிறுவனின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவன் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சை பெற வேண்டியிருந்தது. மேலும் ‘ஸ்கின் கிராஃப்டிங்’ எனப்படும் தோல் மாற்று அறுவை சிகிச்சை உட்பட கூடுதல் சிகிச்சைகளும் சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டன.

சிறுவனின் தாய் தொடக்கத்தில் லேசர் முறையிலான சுன்னத் சிகிச்சையையே தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால், லேசர் முறையில் தழும்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறி, அங்கிருந்த மருத்துவர் கிளாம்ப் முறையைப் பரிந்துரைத்துள்ளார்.

மார்ச் 2023ல் இச்சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனுக்கு வீக்கமும் ரத்தப்போக்கும் ஏற்பட்டு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முறையான சுன்னத் சிகிச்சையில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது இயல்பான பக்கவிளைவு அல்ல என்று மூன்று மருத்துவ வல்லுநர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

சிறுவன் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாலும், இந்தத் தோல் மாற்று அறுவை சிகிச்சைத் தழும்பை அவன் வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் இதன் தோற்றத்தைத் தாண்டி வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

முன்னதாக, இச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் விமர்சித்து பதிவிட்டதற்காக சிறுவனின் தாய், மற்றொரு பெண் மீது மருத்துவமனையை நடத்தும் ‘ஹிஜ்ரா ஹெல்த்கேர்’ நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மருந்தகம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்