ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள உலக மரபுடைமைத் தளமான பொரோபுடூர் கோயிலில் நிரந்தரப் படிக்கட்டு சறுக்கிருக்கையைப் பொருத்துவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவ்விடத்துக்குச் செல்லும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்தோனீசியாவின் கலாசார அமைச்சர் ஃபட்லி ஸோன் வியாழக்கிழமை (ஜூன் 5) தெரிவித்தார்.
படிக்கட்டு சறுக்கிருக்கையைப் பயன்படுத்தி அமர்ந்தபடியே படிகளில் ஏறலாம் அல்லது இறங்கலாம்.
மே 29ஆம் தேதியன்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் பொரோபுடூர் கோயிலுக்குச் சென்றார்.
அவரது பயணத்தை முன்னிட்டு அங்கு தற்காலிகமாகப் படிக்கட்டு சறுக்கிருக்கை பொருத்தப்பட்டது.
இதையடுத்து, அரசாங்கம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
ஆனால், அந்தத் தற்காலிகப் படிக்கட்டு சறுக்கிருக்கை வெறும் சோதனைத் திட்டம் என்றும் நிரந்தரப் படிக்கட்டு சறுக்கிருக்கையைப் பொருத்துவது குறித்து நீண்டகாலமாகவே திட்டமிட்டு வருவதாக அமைச்சர் ஃபட்லி கூறினார்.

